

ராயபுரம்:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சமீபத்தில் 45 அயிரத்து 880 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி ஆர்.கே.நகரில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 407 வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கிடையே நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர்களில் தேவையில்லாமல் தங்களது பெயர்களும் நீக்கப்பட்டு விட்டதாக சிலர் புகார் செய்திருந்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதையடுத்து இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் நடந்தது. 51 மையங்களில் 256 வாக்கு சாவடிகளில் முகாம் நடந்தது.
காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடக்கிறது. 256 நிலை அலுவலர்கள், 21 மேற்பார்வையாளர்கள், 21 கூடுதல் மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு முகாமில் பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதா என்று சரிபார்த்தனர்.
பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதனால் அனைத்து வாக்குசாவடி சிறப்பு முகாம்களிலும் கூட்டமாக இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
---------------
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர் பெயர்கள் மீண்டும் சேர்ப்பு: மருதுகணேஷ் புகார் மனு
ஆர்.கே.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட போலி வாக்காளர் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் புகார் மனு அளித்துள்ளார்.
ராயபுரம்:
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரபேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று நடக்கிறது.
அந்த முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
முகாமில் இருந்து வெளியே வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஒருமனு கொடுத்தார்.
அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்களை அ.தி.மு.க.வினர் மீண்டும் சேர்க்கின்றனர். எனவே அதை தடுக்க வேண்டும்.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்.கே.நகர் தொகுதியில் ஆங்காங்கே ரோடுகள் போடும் பணி நடக்கிறது. அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.