

ராயபுரம்:
சவுகார்பேட்டை வாட்டர் பேசின் ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ் மாஜி (39). இங்கு இவர் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் 10-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ‘டிப்-டாப்’ நபர் ஒருவர் அங்கு வந்தார். தன்னிடம் 481 கிராம் எடையுள்ள 2 தங்க கம்பிகள் இருப்பதாகவும், அதற்கு பதிலாக நகைகள் தரும்படியும் கேட்டார்.
அந்த கம்பிகளை வாங்கி பார்த்த சந்தோஷ் மாஜி அவை தங்கம் என நம்பினார். அதற்கு பதிலாக 329 கிராம் எடையில் 10 தங்க சங்கிலிகள் வழங்கினார்.
இதற்கிடையே இன்று அந்த கம்பிகளை உருக்கி நகையாக மாற்ற தொழிலாளர்களிடம் வழங்கினார். அதை பரிசோதித்த போது அவை தங்க கம்பிகள் அல்ல. செம்பு கம்பிகள் என தெரிய வந்தது. அதன் மூலம் அவர் போலி கம்பிகளை கொடுத்து ரூ.10 லட்சம் நகைகள் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் மோசடி நபரை தேடி வருகின்றனர்.