

சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். கடந்த ஆண்டு தாமதமாக ஜூன் 7-ந் தேதி பருவ மழை தொடங்கியது.
எனவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. பசிபிக் பெருங்கடல்-இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசும் காற்றின் போக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது ஜூன் முதல் வாரம் பருவ மழை தொடங்கிவிடும். அநேகமாக ஜூன் 4-ந் தேதி பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் கேரளாவில் அதிக மழை கிடைக்கும்.
தமிழகத்தில் அதில் பாதி அளவு தான் மழை கிடைக்கும். ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை யொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த காலக் கட்டத்தில் வட மாவட்டங்களில் வெப்பச்சலனம்- வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சில சமயங்களில் மழை பெய்யும்.
இந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.