ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்

சொத்து தகராறில் தந்தையின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 58). இவரது மனைவி ஆவுடையம்மாள். இவர்களது மூத்த மகன் நாகராஜ் (28). இவர் அடிக்கடி தந்தையிடம் அவர் குடியிருக்கும் வீட்டை எழுதி தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று ஆவுடையம்மாள் உடல் நலம் சரியில்லாததால், வத்ராயிருப்பில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

எனவே வீட்டில் ராமராஜ் மட்டும் தனியாக இருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டை எழுதி தரும்படி கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர், அங்கிருந்த கல்லை எடுத்து தந்தை என்றும் பாராமல் ராமராஜ் தலையில் தூக்கிப்போட்டார். இதில் பலத்த காயமடைந்த ராமராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. கொலை குறித்த தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், தந்தையை கொலை செய்த மகன் நாகராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com