மர்ம மரணம் வழக்கில் திருப்பம் - மகன் குடிபோதையில் தாயை கொன்றது அம்பலம்

நெல்லை அருகே மர்மமான முறையில் மூதாட்டி மரணமடைந்த வழக்கில் மகன் குடிபோதையில் கொன்றது தெரிய வந்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சிங்கை:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேட்டு இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுடலையம்மாள் (வயது 90). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் திடீரென்று இறந்துவிட்டார். இதையடுத்து அவரை அடக்கம் செய்யும் பணிகளில் குடும்பத்தினர், உறவினர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையே சுடலையம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுடலையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுடலையம்மாளின் மகன் தொழிலாளியான முருகன் (50) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சுடலையம்மாள் தனது மகன் முருகன், மருமகள் ஆவுடையம்மாளுடன் வசித்து வந்தார். முருகனுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது, சுடலையம்மாளுக்கும், முருகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், தனது தாயை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில் தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் அடைந்த சுடலையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகனை கைது செய்தனர். மேலும் முருகன் குடிபோதையில் செய்வது அறியாமல் தனது தாயை கீழே தள்ளிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். முருகனுக்கு 8 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com