கோவையில் விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு - மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம்

கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்க்கப்பட்ட நிலையில் மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவையில் விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு - மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம்
Published on

கோவை:

கோவையை அடுத்த சூலூர் மயிலம்பட்டி கரையான்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி(வயது 37).

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயலட்சுமிக்கு கடந்த 6-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் 9-ந் தேதி ஜெயலட்சுமி திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் தனது குழந்தையை விற்று விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும், சைல்டுலைன் அமைப்பினருக்கும் புகார் செய்தனர்.

அதன்பேரில் அவர்கள் ஜெயலட்சுமியை பிடித்து விசாரித்த போது பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெயலட்சுமி- வெங்கடேசன் தம்பதிக்கு ஏற்கனவே பிறந்த 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மதுரையில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதில் ஒரு ஆண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கும், ஒரு குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்றுள்ளார். மற்றொரு குழந்தையை தங்களது உறவுப்பெண் ஒருவரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

ஜெயலட்சுமிக்கு குழந்தைகளை விற்றுக் கொடுப்பதில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் புரோக்கராக செயல்பட்டுள்ளார். ஜெயலட்சுமி போலீசில் சிக்கியதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து சைல்டுலைன் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலட்சுமி ஏற்கனவே விற்பனை செய்ததாக கூறப்படும் 3 குழந்தைகள் தற்போது எவ்வாறு உள்ளனர்? ஜெயலட்சுமியிடம் குழந்தைகளை வாங்கி விற்றது போல பெண் புரோக்கர் வேறு பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி விற்றாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் பிடிபட்டால் பல தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட ஆண் குழந்தையை உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்க இருப்பதாக சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com