

கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு சோலார் பேனல் அமைத்து தரும் தொழிலில் ஈடுபட்டார்.
இந்நிறுவனம் பொதுமக்களிடம் பல கோடிக்கு பண மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பியது. இந்த மோசடி கடந்த 2013-ம் ஆண்டு கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது.
இந்த மோசடியில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும், அவரது அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி, இந்த மோசடி குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்தார்.
இந்த கமிஷன் விசாரணை நடத்தி வந்த நிலையில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவி இழந்தது. பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி அமைந்தது.
கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்பு கமிஷனின் விசாரணை சூடு பிடித்தது. உம்மன்சாண்டி, சரிதாநாயர் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலரிடம் நீதிபதி சிவராஜன் விசாரணை நடத்தினார்.
இதில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர், அறிக்கை தயாரித்தார். 1073 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை அவர், கடந்த மாதம் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கையில் இறங்கினார். முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது சோலார் பேனல் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட சரிதாநாயர் பாலியல் புகார் கூறி இருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யும் முன்பு, அதன் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விசாரணை கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் நடந்த வேங்கரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் காதர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயன், சோலார் பேனல் விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார். பின்னர் அறிக்கை தொடர்பாக அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிவித்தார்.
சோலார் பேனல் விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
கடந்த ஆட்சியில் சோலார் பேனல் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். மூத்த அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் இதில் பங்குள்ளது.
எனவே சோலார் பேனல் பற்றி ஏற்கனவே விசாரணை நடத்திய குழு கலைக்கப்பட்டு மூத்த போலீஸ் அதிகாரி ராஜேஷ் தேவன் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும். அவர்கள் இந்த விசாரணையை முன்னெடுத்து செல்வார்கள்.
சோலார் பேனல் விசாரணை அறிக்கையில் கேரள போலீஸ் சங்கத்தின் செயலாளர் அஜித் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது.
இது போல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன் அரசியல் பிரமுகர்கள் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது. அது பற்றியும் விசாரிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக சரிதா நாயார் அளித்த கடிதம் குறித்தும் முழு விசாரணை மேற்கொள்ளப்படும்.
பாலியல் தொடர்பு மூலம் சட்டவிரோத செயல்களுக்கு கிடைத்த அனுமதி, சரிதாவை பயன்படுத்தி எப்படி இந்த வாய்ப்புகளை பெற்றார்கள் என்பது குறித்தும் விரிவாக விசாரிக்கப்படும்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜெயில் ரெக்கார்டுகளில் உள்ள விபரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசி முடித்ததும், விசாரணை கமிஷன் அறிக்கையின் நகல் சபையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அதன் நகல்கள் பத்திரிகைகளுக்கும் அளிக்கப்பட்டது.
இக்கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் உம்மன்சாண்டி மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் ஆனதை தொடர்ந்து இனி இதன் மீதான நடவடிக்கை ஆரம்பமாகும். மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களும் பகிரங்கமாகும்.