

புதுடெல்லி:
திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.
சமீபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், நேற்றும் நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் விதமாக, ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசியுள்ளார்.
‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும்’ எனவும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சை கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் பல்வேறு ஐடியாக்களை முன்வைத்துள்ளனர்.
ஜியோ மற்றும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் பிரைம் மினிஸ்டராக (பிரதமராக) வரமுடியும். மாவட்ட கலெக்டர்கள் வீடு வீடாக போர் வரி கலெக்ட் (வசூலிக்க) செய்ய வேண்டும். கேட் (பூனை) கேட் தேர்வு எழுத வேண்டும். சிங்குகள் மட்டுமே சிங்கர் ஆக முடியும். பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கடை வைக்க முடியும் என அவரை #SayItLikeBiplab (பிப்லப் போல பேசு) என்ற ஹேஷ்டேக் மூலம் கலாய்த்து வருகின்றனர்.