கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த மலைபாம்பு

கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குள் மலைபாம்பு நுழைந்ததால் பெண் போலீசார் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மலைபாம்பு
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மலைபாம்பு
Published on

வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் கிளை போலீஸ் நிலையமாக வடவள்ளி போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நவாப் என்ற ஊரிலிருந்து சோமயம்பாளையம் செல்லும் வழியில் புதிதாக வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு புதிய கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. போலீஸ் நிலையத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம். இந்த போலீஸ் நிலையத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் போலீசார் 9 ஆண் போலீசார் பணியில் உள்ளனர்.

இந்த போலீஸ் நிலையம் பகுதியில் மலை பாம்பு நடமாட்டம் உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் பலமுறை அப்பகுதியில் மலைப்பாம்பு நடமாடுவதை பார்த்து அங்கு பணிபுரியும் போலீசாரிடம் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு போலீசார் அமர்ந்திருக்கும் வரவேற்பு அறைக்குள் நுழைந்தது. அப்போது பணியிலிருந்த பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் , புகார் அளிக்க வந்த பொதுமக்கள் பாம்பை பார்த்து பதறி அடித்து ஓடினர்.

பின்னர் அந்த பாம்பு அருகிலிருந்த புளியமரத்தின் அருகே உள்ள புதருக்குள் நுழைந்தது. போலீஸ் நிலையத்தை ஒட்டி புதர்கள் அதிகம் இருப்பதால் அடிக்கடி பாம்புகள் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து விடுவதாக அங்கு பணிபுரியும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com