செவ்வாப்பேட்டையில் ரெயிலில் கிடந்த பையில் புகை வந்ததால் பரபரப்பு

செவ்வாப்பேட்டையில் ரெயிலில் கிடந்த பையில் புகை வந்ததால் பதட்டம் அடைந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
செவ்வாப்பேட்டையில் ரெயிலில் கிடந்த பையில் புகை வந்ததால் பரபரப்பு
Published on

திருவள்ளூர்:

சென்னையிலிருந்து இன்று காலை 7 மணிக்கு திருத்தணிக்கு புறநகர் ரெயில் புறப்பட்டது. செவ்வாப்பேட்டை அருகே 8.10 மணி அளவில் வந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து புகை வெளியேறிய நிலையில் ஒரு பையை தண்டவாளத்தில் வீசினர்.

இதனால் ரெயில் நிலையத்தில் சென்னைக்கு செல்லும் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து திருவள்ளூர் ரெயில் நிலைய மேலாளருக்கு கொடுத்த தகவலின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து சோதனை மேற் கொண்டனர்.

புகை வந்து கொண்டிருந்த அந்த பையில் திறந்து பார்த்த போது கண் பார்வையற்றவர்கள் ரெயிலில் மைக் மூலம் பாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி என்றும் அது சூடு காரணமாக புகை வந்ததும், அதனைக் கண்டு பயந்து போன சக பயணிகள் அதை ரெயிலில் இருந்து தூக்கி வெளியில் வீசியதும் தெரியவந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கும் ரெயிலில் இருந்து புகையுடன் கூடிய பை வெளியே விழுந்ததும், அது வெடிகுண்டாக இருக்குமோ என்ற பயம் அனைத்து பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com