வங்காள தேசத்திற்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

குசால் பெரேரா, திசாரா பெரேரா ஆகியோரின் அரைசதங்களால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvBAN
வங்காள தேசத்திற்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை
Published on

இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்காள தேசம், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக்கில் வங்காள தேசம் - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாகும்.

இதில் வெற்றி பெற்றால்தான் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதமுடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கின. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

குணதிலகா 4 ரன்கள் எடுத்த நிலையிலும், குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும், உபுல் தரங்கா 5 ரன்னிலும், ஷனகா ரன்ஏதும் எடுக்காமலும், ஜீவன் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை 8.1 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேரா உடன் கேப்டன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் பெரேரா 40 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 61 ரன்கள்  அடித்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்ககு 10.1 ஓவரில் 97 ரன்கள் குவித்தது. பெரேரா 37 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து  வருகிறது,

X

Maalai Malar
www.maalaimalar.com