

பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்த நாணல் புதரில் அடையாளம் தெரியாத ஒருவரின் எலும்புக் கூடுகள் கிடந்தன.
இது குறித்து திருச்செனம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன்(வயது44) தோகூர் போலீசில் புகார் செய்தார். எலும்புகள் கிடந்த இடத்திற்கு திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
எலும்புகள் கிடந்த இடத்தில் கொலுசு மற்றும் பெண்கள் அணியும் செருப்பு, சேலையின் ஒரு பகுதி கிடந்தது. இதனால் எலும்புக் கூடு 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்ணாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இறந்து பல நாட்கள் ஆன நிலையில் அவர் யார் எதற்காக இந்த இடத்திற்கு வந்தார். எப்படி இறந்தார் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் புகாரின் பேரில் தோகூர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.