சபரிமலையில் துப்பாக்கியுடன் சிக்கிய 6 பேர் நக்சலைட்டுகளா?: போலீசார் விசாரணை

சபரிமலையில் துப்பாக்கியுடன் சிக்கிய 6 பேர் நக்சலைட்டுகளாக இருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலையில் துப்பாக்கியுடன் சிக்கிய 6 பேர் நக்சலைட்டுகளா?: போலீசார் விசாரணை
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நாளை (26-ந்தேதி) பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் மண்டல பூஜையின் போது, சாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 22- ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

இன்று பகல் அந்த தங்க அங்கி பம்பை வந்து சேரும். பம்பை கணபதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள தாளம் முழங்க சபரிமலை கொண்டு செல்லப்படும்.

பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும் தங்க அங்கி, 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து , 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின் பகல் 11.05 மணி முதல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.

மண்டல பூஜையை யொட்டி சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கமாண்டோ, விரைவு அதிரடி படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினர் மற்றும் பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 3000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய விமான படை பிரிவின் சிறப்பு ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. பம்பை, சன்னிதானம் பகுதிகளில் முழு நேரமும் வட்டமிட்டபடி கண்காணிப்பில் ஈடுபடும் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டல பூஜையை யொட்டி சபரிமலை மற்றும் சுற்று பகுதியில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. பம்பை அருகே சாலக்கயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திராவில் இருந்து வந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் இருந்தவர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ராமேசுவரரெட்டி, சீனிவாச ரெட்டி, கமலாசனரெட்டி, கமலேக்கர் ரெட்டி, வேணு கோபால் ரெட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் யாரும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் போல மாலை அணிந்தோ, இருமுடி கட்டுடனோ இல்லாதது அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சபரிமலையில் நாசவேலை செய்ய வந்த நக்சலைட்டுகளாக இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக தங்க கொடிமரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது கொடி மரம் பீடத்தில் பாதரசம் ஊற்றி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கும்பல் சேதப்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கியுடன் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com