

திருச்சி:
மாணவி அனிதாவின் தற்கொலை திட்டமிட்டு நடந்த சம்பவம் என்றும், இந்த மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
மேலும் அவர் குன்னம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான சிவசங்கர், கல்வியாளர் கஜேந்திர பாபு ஆகியோர் மாணவி அனிதாவின் மரணத்தில் நேரடியாகவோ, மறைமுக மாகவோ சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுகிறது என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து பதிலளித்த சிவசங்கர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
மாணவி அனிதாவின் தற்கொலையால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒருநாள் முழுவதும் கண்ணீரில் தத்தளித்துள்ளது. அனைத்து இடங்களிலும் மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டங்களும் நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கல் மனம் படைத்தவர் போன்று பேசி வருகிறார். அதிலும் அனிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், அதில் என்னையும் ஈடுபடுத்தி கூறியுள்ளார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குக்கிராமத்தில் பிறந்து, பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று டாக்டராக வேண்டும் என்று லட்சிய கனவுடன் வலம் வந்த மாணவி அனிதா நீட் தேர்வால் இன்று தனது உயிரை மாய்த்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக அவர் வெகுண்டெழுந்தபோது அவரை வெளியுலகிற்கு கொண்டு வந்தவன் நான். அனிதாவை போல் எத்தனையோ சாதனை படைத்த மாணவ, மாணவிகள் இன்று வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவருக்குமாய் ஒட்டுமொத்த குரல் கொடுக்க தயாரான மாணவி அனிதா சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தினார். ரத்தத்தில் கையெழுத்திட்டு அதனை பிரதமருக்கும் அனுப்பினார்.
அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தன்னை எதிர் மனுதாரராகவும் இணைத்துக் கொண்டவர். தனக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மாணவர்களுக்காக போராடிய மாணவி அனிதாவிற்கு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறந்த வழி காட்டியாக திகழ்ந்தவர். அனிதாவிற்காக அவரது சகோதரரும் இறுதிவரை போராடினார்.
அப்பேற்பட்ட சூழ்நிலையில் சற்றும் யோசிக்காமல் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பது வேடிக்கையானது. அவ்வாறு வந்தால் சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை கிருஷ்ணசாமி கூறிவந்தால் தலைமை கழகத்தின் அனுமதி பெற்று அவர் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.