திரிபுராவில் பாஜக வெற்றிக்கு பணபலம், ஆள்பலமே காரணம்: சீதாராம் யெச்சூரி

திரிபுராவில் பா.ஜனதா வெற்றிக்கு பணபலம் மற்றும் ஆள்பலமே காரணம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
திரிபுராவில் பாஜக வெற்றிக்கு பணபலம், ஆள்பலமே காரணம்: சீதாராம் யெச்சூரி
Published on

புதுடெல்லி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

25 ஆண்டுகள் திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-ஐ.பி.டி.எப் கூட்டணி அரசு அமைவதற்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டு கூட்டணி தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அது இப்போது மாறியுள்ளது. 45 சதவீத மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளை எங்கள் கட்சி ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும்.

திரிபுராவில் மிகப்பெரிய அளவில் பணபலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தியதாலேயே பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியால் முன்னாள் எதிர்க்கட்சிகள் உள்பட கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்ட முடிந்துள்ளது. அதனாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

பா.ஜனதா தனது பண பலத்தை பயன்படுத்தி அனைத்து விதமான சக்திகளையும் ஒன்றினைத்துள்ளது. எந்தவித தார்மீக நெறிகளையும் பின்பற்றாமல் அந்த கட்சி இதை செய்துள்ளது. இதன் பின் விளைவுகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com