பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டுள்ள பாடகர் யேசுதாஸ்

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிரபல பாடகரான கே.ஜே.யேசுதாஸ் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டுள்ள பாடகர் யேசுதாஸ்
Published on

திருவனந்தபுரம்:

மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட நாட்டின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ள கே.ஜே.யேசுதாஸ் கடந்த 56 ஆண்டுகாலமாக பாடி வருகிறார். குறிப்பாக இந்து கடவுள்களை பற்றியும் ஐயப்ப சுவாமியை பற்றியும் இவர் அதிகம் பாடியுள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள கே.ஜே.யேசுதாஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு இவர் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதேபோல்,  மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திற்கு சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பம் பெறப்பட்டதை பத்மநாப சுவாமி கோயிலின் நிர்வாக அதிகாரி வி ரதீசன் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 30-ம் தேதி விஜயதசமி தினத்தன்று இந்த கோயிலில் தரிசனம் செய்ய கே.ஜே.யேசுதாஸ் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கருத்து கூறிய ரதீசன், “யாராக இருந்தாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரலாம். இந்து மதத்தின் மீது யேசுதாஸ் கொண்டுள்ள நம்பிக்கை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

எனவே, அவர் இங்கு தரிசனம் செய்ய வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com