

தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை நாயக்கனூரை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் இளவரசன் (வயது 22).
இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீ யரிங் படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 5-ந் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் இளவரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து இளவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.