ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன் இன்று முதல் மவுன விரதத்தை தொடங்கினார்

வேலூர் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்தது. இன்று காலை முதல் அவர் மவுன விரதத்தையும் தொடங்கினார்.
ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன் இன்று முதல் மவுன விரதத்தை தொடங்கினார்
Published on

வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை கைதி முருகன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் விடுதலை கிடைக்கவில்லை.

ஜெயில் வாழ்க்கை தொடர விருப்பம் இல்லை. அதனால் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு கடிதம் எழுதினார்.

அவர் அறிவித்தபடி கடந்த 18-ந் தேதி தனது ஜீவசமாதி நிலையை அடைவதற்காக உணவுகளை உட்கொள்ளாமல் விரதம் இருந்து வருகிறார்.

தொடர்ந்து இன்று 4-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். இன்று அவரது உடல்நிலை சோர்வடைந்துள்ளது. டாக்டர்கள் அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் இன்று முதல் மவுன விரதம் இருக்க போவதாக முருகன் நேற்று தெரிவித்தார். அதன்படி இன்று காலை மவுன விரதத்தையும் தொடங்கினார்.

சிறைக்குள் கைதி உணவு உண்ணாமல் இருப்பது சிறை விதிகளை மீறும் செயலாகும். அதன்படி சிறை விதியை முருகன் மீறியதால் அவருக்கு உறவினர்களை சந்திக்கும் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முருகன் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது மனைவியை போலீஸ் காவலுடன் பெண்கள் சிறைக்கு சென்று சந்தித்து பேசுவார். சிறை விதிகளை முருகன் மீறியதால் அவருக்கு உறவினர்கள், மனைவி நளினியை சந்திக்கும் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் தனது உறவினர்கள் மற்றும் மனைவியை 3 மாதங்கள் சந்திக்க இயலாது.

தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் பிற சலுகைகளும் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது உடல்நிலை குறித்து ஜெயில் டாக்டர் மற்றும் அவரது குழுவினர் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com