

பெங்களூரு:
கர்நாடகாவில் ஆண்டுதோறும் நவம்பர் 1 -ந்தேதி கர்நாடக ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956 -ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னட மொழி பேசும் மாநிலமாக கர்நாடகா உருவான தினத்தை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது.
இன்று காலை பெங்களுரு கண்டிரவா மைதானத்தில் நடந்த விழாவில் கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக கன்னட மொழி கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கன்னட பாடம் கட்டாயமாக்கப்படும்.
கன்னட மொழி தெரியாத மக்கள் கூட கன்னடம் கற்றுக்கொள்வது அவசியம். அவர்கள் தங்களது குழந்தைகளுக்கும் கன்னட மொழியை கற்றுத்தர வேண்டும். இப்படி நான் பேசுவதால் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் என்று கருதக்கூடாது.
கர்நாடக மாநிலத்தில் வசித்துக் கொண்டு கன்னடத்தை கற்காவிட்டால் அது அந்த மொழிக்கு செய்யும் அவமரியாதையாக கருதப்படும். கர்நாடகத்தில் வேறு மாநிலத்தவர்கள் வசித்தாலும் அவர்கள் கன்னடர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். எனவே கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு, சூமோஹா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். பெங்களுருவில் நிறைய சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளதால் அங்கு வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
இன்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அனைவரும் கன்னட மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருப்பதால் அனைத்து மாநில மக்களும் கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகாவில் வசிக்கும் மற்ற மாநில மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் 6 மாதத்தில் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த மாநில அரசு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.