

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் நன்னிலம் (வயது 19). பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது அதே பகுதியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு தங்கம்மாள் ஓடை பகுதியை சேர்ந்த சிலர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்பேரில் மாணவர் அங்கு சென்றார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் 6 வாலிபர்கள் சேர்ந்து நன்னிலத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்தார். அலறி சத்தம் போட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாணவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உடுமலை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஏ.எஸ்.பி. மாடசாமி, டி.எஸ்.பி. விவேகானந்தன் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.