அரசு டாக்டர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து

இரவு-பகல் பாராமல் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை:

மருத்துவ முதுகலை மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு டாக்டர்களை, நோயாளிகளின் உறவினர்கள் தாக்குவது குறித்த விவரங்கள் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகளில் போதுமான எண்ணிக்கையில் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?, மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் 2 டாக்டர்கள் எந்த நேரமும் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும், அதேநேரம் அரசு டாக்டர்களுக்கு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இணையான ஊதியமே வழங்கப்படுகிறது. இதனால்தான் பள்ளிப்படிப்பில் முதலிடம் பிடித்து, டாக்டர்களான இவர்கள், தனியார் ஆஸ்பத்திரியை நாடிச்செல்கின்றனர். ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் அதிக அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏன் நீதிபதிகளின் உதவியாளர்கள் கூட அரசு டாக்டர்களைவிட கூடுதலாக சம்பளம் பெறுகின்றனர்.

எனவே, விடுப்புகூட எடுக்க முடியாமல், இரவு, பகல் பாராமல் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு குறைந்தபட்சம் குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியமாவது வழங்கப்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com