காஷ்மீரில் பேரணி நடத்தச் சென்ற பிரிவினைவாத தலைவர்கள் கைது

காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தாரை சந்திக்க பேரணியாக செல்ல முயன்ற பிரிவினைவாத தலைவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் பேரணி நடத்தச் சென்ற பிரிவினைவாத தலைவர்கள் கைது
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக், குல்காம், சோபியான் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை பாதுகாப்பு படையினர் வேட்டையாடினர். பயங்கரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 13 பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்களும், பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மரணம் அடைந்த பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று ‘சோபியான் செல்வோம்’ என்னும் மாபெரும் பேரணிக்கு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, அனந்த்நாக், குல்காம், சோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோபியான் நகரை இணைக்கும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, போலீசார் சாலை தடுப்புகளை அமைத்து காவல் காத்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை முழுவதும் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக இன்று ஸ்ரீநகரில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வெளியே வந்த ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாயிஸ் உமர் பாருக் மற்றும் சையத் அலி ஷா கிலானி ஆகியோரை போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com