இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம்

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதையடுத்து கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை ரத்தினபுரி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த காட்சி
கோவை ரத்தினபுரி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த காட்சி
Published on

கோவை:

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த்(33) என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல் கோவை கணபதி வேதாம்பாள் நகரில் உள்ள இதாயத்துல் மசூதியில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதையடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பினரும் நேற்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த கடையடைப்பு போராட்டத்தை இந்து முன்னணி மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பினர் இன்று ஒத்திவைத்தனர். ஆனாலும் இந்து முன்னணி சார்பில் கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி, சூலூர், அனூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இந்நிலையில் இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்தப்படி கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாநகரில் உள்ள டீகடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில இடங்களில் மட்டும் டீ கடைகள் திறந்து இருந்தன. கோவையில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, திருச்சி ரோடு, கரும்பு கடை, போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 30 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கூடுதல் ஏ.டி.ஜி.பி.க்கள் ஜெயந்த்முரளி, சங்கர் ஜூவால் மேற்பார்வையில் கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 300 மத்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பதட்டமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையும் நடத்தினர். மேலும் புறநகர் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கோவை மாவட்டம் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com