சோழவந்தானில் இன்று காலை லாரி டிரைவர் வெட்டிக் கொலை

சோழவந்தான் அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவந்தானில் இன்று காலை லாரி டிரைவர் வெட்டிக் கொலை
Published on

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேட்டு நீரேத்தான் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் சுரேஷ் (வயது 29). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

சுரேஷ் திருமணத்துக்காக இன்று மாலை பெண் பார்க்க செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக சுரேஷ் நேற்று இரவு ஊருக்கு வந்தார்.

இன்று காலை 6.30 மணிக்கு முடி வெட்டுவதற்காக சுரேஷ் வெளியே புறப்பட்டார். மேட்டு நீரேத்தான் பெரியாறு கால்வாய் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்தது. அந்த கும்பல் அவரிடம் தகராறு செய்தது. திடீரென்று அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து சுரேசை வெட்ட முயன்றனர்.

அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த கும்பல் அவரை விரட்டி சென்றது. பெரியாறு பாசன கால்வாய் மயானம் அருகே சுரேஷ் கும்பலிடம் சிக்கினார். அவர்கள் சுரேசை சரமாரியாக வெட்டினர்.

தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் டி.எஸ். பி. மோகன் குமார், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஊருக்கு வந்த சுரேசை மர்ம கும்பல் திட்டமிட்டு கொலை செய்துள்ளது. அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com