

சோழவந்தான்:
சோழவந்தான் அருகேயுள்ள திருவாலவாய நல்லூரைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 39). அந்தப்பகுதியில் கயிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். நித்தியானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 3 பேர் அங்கு வந்தனர். முதலில் அவர்கள் நித்தியானந்தம் வீட்டின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை உடைத்தனர்.
பின்னர் முன்பக்கம் வந்த அவர்கள் அங்கு மாட்டப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவையும் சேதப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்த நித்தியானந்தம் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது முகமூடி கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி நித்தியானத்தத்தை மிரட்டினர்.
வீட்டில் இருக்கும் நகை பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறினர். நகை-பணத்தை தர முடியாது என அவர் மறுக்கவே அந்த கும்பல் அவரை தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என நினைத்த அவர் தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றிக் கொடுத்தார்.
முகமூடி கும்பல் நித்தியானந்தத்தின் மனைவியையும் மிரட்டி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டது.
அடுத்த கட்டமாக வீட்டிலிருந்த பீரோவை உடைத்த முகமூடி கும்பல் அதில் இருந்த 14 பவுன் வைர, நெக்லஸ், தோடு, வளையல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டதோடு நித்யானந்தம், அவரது மனைவியின் செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டது.
துணிகர கொள்ளை குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
துப்பு துலங்க வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வீட்டை சுற்றி வந்து சிறிது தூரம் சென்று படுத்துக் கொண்டது. முகமூடி கொள்ளையர்கள் 3 பேரும் மதுரை தமிழில் பேசியிருக்கிறார்கள்.
எனவே அந்தப்பகுதியில் உள்ளவர்களே கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
முகமூடி கொள்ளையர்கள் சி.சி.டி.வி. கேமிராவை உடைப்பதற்கு முன் அவர்களது உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.