

மும்பை:
பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் நலன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவு தந்த எச்சரிக்கையை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டது தான் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி மந்திரி அருண் ஜெட்லி பழைய திட்டங்களை புதிய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இவையனைத்தும், நிதி மந்திரி பட்ஜெட் உரையை படிக்கும்போதே வெளிப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு பணவீக்கம் தொடர்பான விஷயத்தில் தோற்றுப்போய் விட்டது. எனவே, புதிய அரசாவது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் என மக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் தேர்தலில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. இதை உணர்ந்ததால் தான், மத்திய அரசு கிராமங்கள் மற்றும் விவசாயிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #unionbudget #sivasena #tamilnews