

சிம்லா:
இமாசலப்பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கை பகுதியில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி நடந்த பெண் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்த சுராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கோட்கை போலீஸ் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, கற்பழிப்பு புகாரில் கைதான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு சூரஜிற்கும் அவருடன் கைது செய்யப்பட்ட ராஜேந்தர் என்ற ராஜீவிற்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் ராஜீவ் சூரஜின் தலையை சுவற்றில் பயங்கரமாக மோதினார். இதில் படுகாயமடைந்த சூரஜ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
சிறை லாக்கப்பில் கைதி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றும் பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்கை காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். போலீசார் லத்தி சார்ஜ் செய்தும், துப்பாக்கியால் வானத்தை பார்த்து சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். மேலும் இச்சண்டையில் பொதுமக்கள் உட்பட 6 போலீசார் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து இமாசலப்பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதை தொடர்ந்து இதற்கு தனி குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.