அயோத்தியில் அமைக்கப்படும் ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகள் பரிசு: இஸ்லாமிய ஷியா வாரியம் அறிவிப்பு

அயோத்தி நகரில் விரைவில் அமைக்கப்படும் ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உ.பி. மாநில இஸ்லாமிய ஷியா வாரியம் தீர்மானித்துள்ளது.
அயோத்தியில் அமைக்கப்படும் ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகள் பரிசு: இஸ்லாமிய ஷியா வாரியம் அறிவிப்பு
Published on

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய அந்த வணக்கஸ்தலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பிரதிவாதிகள் வரிசையில் உள்ளது.

இதற்கிடையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டுவதை தவிர்க்கும் வகையிலும், இதனால் மேலும் பிரச்சனைகள் உருவாவதை தவிர்க்கும் வகையிலும் என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில ஷியா வக்ப் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்திருந்தது.

சர்ச்சைக்குரிய இடத்தில்தான் மசூதி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு, அருகாமையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய மசூதி கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும் என ஷியா வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அயோத்தியில் சராயு நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உ.பி. மாநில இஸ்லாமிய ஷியா வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உத்தரப்பிரப்பிரதேசம் மாநில மத்திய ஷியா வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த பகுதியை முன்னர் ஆண்ட நவாப்கள் அயோத்தியில் உள்ள கோயில்களுக்கு மதிப்பு அளித்து வந்துள்ளனர். மத்திய அயோத்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு தேவையான நிலத்தை 1739-ம் ஆண்டு நவாப் ஷுஜா-உத்-தவ்லா நன்கொடையாக அளித்திருந்தார். 1775-1793 ஆண்டுகளுக்கு இடையில் அங்கு கோயில் கட்டுவதற்கான நிதியை நவாப் ஆசிப்-உத்-தவ்லா வழங்கினார்.

ராமருக்கு சிலை அமைக்கும் மாநில அரசின் முடிவு பாராட்டத்தக்கது. இந்த முடிவு உலக வரைப்படத்தில் அயோத்தி நகருக்கு தனிப்பெருமை சேர்க்கும். ஒருமைப்பாட்டை உணர்த்தவும், ஷியா இனத்தவர்கள் ராமரின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பின் அடையாளமாகவும் ராமர் சிலையில் உள்ள அம்பரா தூளிக்கான வெள்ளி அம்புகளை பரிசாக அளிக்க ஷியா வாரியம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com