

இஸ்லாமாபாத்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவந்த நிலையில் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரிப், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிறையில் இருந்து 3 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டுள்ளார்.
#Sharifjailsentencessuspended #NawazSharifreleased