பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதா?: சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் நடைபெற்றுவரும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதா?: சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம்
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல்  திருப்பமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளம், கங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மறுநாளே, பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.

நிதிஷ் குமார் முதல் மந்திரியாகவும் பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்து வந்தார்.

இதனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசில் சரத்யாதவுக்கு மந்திரி பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாகவே சரத் யாதவ் அமைதி காப்பதாகவும் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் யாதவ், நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைத்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் வாக்களித்தது இதற்காக அல்ல. மாபெரும் கூட்டணி என்பதை நம்பித்தான் மக்கள் வாக்களித்திருந்தனர். பீகாரில் நடைபெற்றது துரதிருஷ்டவசமானது’ என்று செய்தியாளர்களிடம் சரத் யாதவ் கூறினார்.

இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் நடைபெற்றுவரும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்து மக்களின் நலனுக்கு எதிராகவும் பேசினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் சரத் யாதவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீட்டின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் கடிதத்தில், தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துகொண்டு பெரிய தவறை செய்து விட்டீர்கள். இதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை வலதுசாரி அமைப்பினர் அனுப்பியிருக்கக் கூடும் என கருதப்படும் நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com