செய்யது பீடி நிறுவனம் ரூ.161 கோடி வரி ஏய்ப்பு - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமான வரித்துறை ஆய்வு பணி முடிந்தநிலையில் செய்யது பீடி குழுமம் ரூ.161 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
செய்யது பீடி நிறுவனம் ரூ.161 கோடி வரி ஏய்ப்பு - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை:

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ‘செய்யது பீடி’ குழுமம் செயல்பட்டு வருகிறது. செய்யது பீடி குழுமம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது. ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முடிந்த பின்னரே, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு பணி முடிந்தநிலையில் செய்யது பீடி குழுமம் ரூ.161 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்து உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்கப்படாத வகையில் வருமானவரித்துறையுடன், அமலாக்கப்பிரிவு சார்பிலும் நடவடிக்கை பாயலாம் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com