

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நேற்று வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு அமைந்த இந்த படம் சிரஞ்சீவியின் சிலகால இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் என்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படம் அமைந்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் சைரா நரசிம்மா ரெட்டி படம் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே உலை வைத்து விட்டது. பொதுவாக அபிமான நடிகர்களின் படங்கள் ரிலீசானால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வார்கள்.
அதேபோல் இவர்களும் பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று சைரா படத்தை பார்த்ததுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுத்த படம் வெளியில் கசிந்ததால் இப்போது சஸ்பெண்டு ஆகியிருக்கிறார்கள். அந்த 7 சப் இன்ஸ்பெக்டர்களும் கர்னூல் மாவட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள்.
நேற்றைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவலில் தியேட்டருக்கு சென்றுவிட்டனர்.