

மதுரை:
மேலூரில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொதுச் செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த பொதுக்கூட்டம் மாநாடு போன்று நடக்க வேண்டும். அதனால் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் இரண்டு லட்சம் தொண்டர்கள் வரை கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது கட்சியினரிடயே புது உற்சாகத்தினையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கூவத்தூரில் சசிகலா மற்றும் தினகரன் கேட்டுக் கொண்டதின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை 122 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சராக தேர்வு செய்த நிலையில் தற்போது அவரின் செயல்பாடு தாய்க்கு செய்யும் துரோகம் போன்று உள்ளது.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசை கவிழ்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த ஓ.பி.எஸ்சுடன் தற்போது கூட்டனி வைக்க வேண்டிய அவசியம் என்ன?
27 பேர் கொண்ட குழுவினர் முடிவெடுக்க இது ஒன்றும் குடும்பமோ, நிறுவனமோ இல்லை. 1 1/2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை அரசு விழாவாக கொண்டாடப்பட்ட நிலையில், கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி விழாவாக மேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இது 6 மாதமாக சோர்வாக இருந்த கட்சி தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.