

சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவருடைய மனைவி
பவளாயி (வயது 79). இவர்களுக்கு வசந்தா (60) என்ற மகளும், வேலுசாமி (58) என்ற மகனும் உள்ளனர். கருப்பண்ண கவுண்டர் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
வேலுசாமிக்கு தேவிகா என்ற மனைவியும், வீரக்குமார் என்ற மகனும் உள்ளனர். வீரக்குமார் சாலை பணி ஒப்பந்ததாரராக உள்ளார். வேலுசாமிக்கு
குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வேலுசாமி தனது தாயார்
பவளாயியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பவளாயி வீட்டில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும்
வேலுசாமி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது பவளாயி தனது பெயரில் இருந்த 8 ஏக்கர் நிலத்தை வேலுசாமியின் மகன் வீரகுமார் பெயரில் எழுதி வைத்ததும், இந்த ஆத்திரத்தில் வேலுசாமி, தனது தாய் பவளாயியை கொடுவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு சின்னபள்ளம்பாறை வனப்பகுதியில் பதுங்கி இருந்த வேலுசாமியை கைது செய்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவு வந்தவுடன் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.