பரபரப்பு செய்திகள் பூமராங் ஆகி திருப்பித் தாக்கும்- ஊடகங்களுக்கு தமிழக கவர்னர் எச்சரிக்கை

பரபரப்புக்காக வெளியிடப்படும் சில செய்திகள் பூமராங் ஆகி திருப்பித் தாக்கும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊடகங்களை எச்சரித்துள்ளார். #BanwarilalPurohit
பரபரப்பு செய்திகள் பூமராங் ஆகி திருப்பித் தாக்கும்- ஊடகங்களுக்கு தமிழக கவர்னர் எச்சரிக்கை
Published on

சென்னை:

சென்னையில் தென்னிந்திய ஊடகங்களின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அசாம் மாநில கவர்னராக பொறுப்பேற்பதற்கு முன்னர் 40 ஆண்டுகாலம் பத்திரிகையாளராக இருந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர், பத்திரிகைகளும், ஊடகங்களும் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை நான் அறிவேன் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பொதுமக்களின் நலன்கருதி சரியான நேரத்துக்குள் தகவல்களை சேகரிப்பதும், அவற்றின் நம்பகத்தன்மை தொடர்பாக ஆராய்ந்து, சேகரித்த தகவல்களை செய்தி வடிவில் கொண்டு சேர்ப்பதும் சாதாரண காரியமல்ல. தென்னிந்திய செய்தி சேனல்கள் துல்லியமான செய்திகளை வழங்கி வருகின்றன. கல்வியறிவு அதிகரித்துள்ளதால் பத்திரிகைகள் விற்பனையின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிகளின் பங்களிப்பும் விரிவடைந்துள்ளது.

செய்திகளை உருவாக்க முடியாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையை உள்ளபடி உரைப்பவையாக செய்திகள் அமைய வேண்டும்.

ஏராளமானவர்களை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்திற்காக சில பத்திரிகையாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பரபரப்பான செய்திகளை வெளியிட முயற்சிப்பது இயல்புதான். இத்தகைய செயல்கள் தொழில் தர்மத்துக்கு எதிரானது மட்டுமல்ல. சில நேரங்களில் இப்படிப்பட்ட பரபரப்பான செய்திகள் ‘பூமராங்’ ஆகி திருப்பித் தாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெண் நிருபரின் கன்னத்தில் கவர்னர் பன்வாரிலால் தட்டியதாகவும், கடலூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தச் சென்ற கவர்னர் ஒரு பெண் குளிக்கும்போது எட்டிப்பார்த்தார் என்றும், கல்லூரி மாணவிகளை விலைபொருளாக்க முயற்சித்த அருப்புக்கோட்டை பேராசியை நிர்மலா தேவி தொடர்பான ‘செக்ஸ் ஊழல்’ விவகாரத்தில் கவர்னரின் பெயரை இணைத்தும் சில ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்ட நிலையில், கவர்னர் பன்வாரிலால் இன்று விடுத்துள்ள ‘பூமராங்’ எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. #BanwarilalPurohit

X

Maalai Malar
www.maalaimalar.com