

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையாம்பாளையம் குட்டையில் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியது. இதில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிச்சென்றனர். இதனை கண்காணிக்க கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் நியமிக்கப்பட்டார்.
மலையாம்பாளையம் குட்டையில் அரசு அனுமதி அளித்த அளவை விட அதிகளவு மண் அள்ளப்பட்டுள்ளதாக அந்த பகுதி கிராம மக்கள் திருப்பூர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர், சப்-கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் கடந்த 21-ந்தேதி கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்காமல் அவரை சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், சஸ்பெண்டு செய்த சப்-கலெக்டர் ஷ்ரவன்குமாரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா அலுவலகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றும் 2-வதுநாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.