பினராய் விஜயன் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - கேரள முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முடிவு

மீண்டும் பதவி வழங்காததால் பினராய் விஜயன் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக கேரள முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முடிவு செய்துள்ளார்
பினராய் விஜயன் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - கேரள முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முடிவு
Published on

கேரள மாநிலத்தில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் சென்குமார்.

கேரளாவில் சட்டசபை தேர்தல் முடிந்து பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும், சென்குமார் டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும், புற்றிங்கல் கோவில் வெடி விபத்தை தடுக்க தவறி விட்டதாகவும் கூறி இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு சென்குமாரை பதவி நீக்கம் செய்த முடிவு தன்னிச்சையானது என்று கூறி அவருக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சென்குமார், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அதனுடைய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை கேரள தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். கோர்ட்டு உத்தரவுப்படி, தனக்கு மீண்டும் பதவி வழங்கவேண்டுமென்றும் கோரி இருந்தார்.

ஆனால் கேரள அரசு இதுவரை அவருக்கு பதவி வழங்கவில்லை. அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி சென்குமார் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாத கேரள அரசின் செயல்பாடு கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே இதுபற்றி வருகிற திங்கட் கிழமை சுப்ரீம் கோர்ட்டில், கேரள அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com