பாலேஸ்வரம் கருணை இல்லம் திரும்ப மறுக்கும் முதியோர்கள் - ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியோர்கள் மீண்டும் கருணை இல்லத்திற்கு வருவதை விரும்பவில்லை என ஐகோர்ட்டில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாலேஸ்வரம் கருணை இல்லம் திரும்ப மறுக்கும் முதியோர்கள் - ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
Published on

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அந்த இல்லத்தில் தங்கியிருந்த ராமதாஸ் உள்பட 294 முதியவர்களை வருவாய் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று, வேறு இல்லத்தில் சேர்த்தனர்.

 இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புனித ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கருணை இல்லத்தில் ஒப்படைத்த பின்னர், அதுகுறித்து விரிவான அறிக்கையை வருவாய் துறை அதிகாரிகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பிற இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்கள் பாலேஸ்வரம் கருணை இல்லம் திரும்ப விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, அரசு கூறுவது உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக வழக்கறிஞர் ஆணையராக சஞ்சய் மோகனை ஐகோர்ட் நியமித்துள்ளது. வழக்கறிஞர் ஆணையருக்கு உதவியாக மனநல மருத்துவரையும் நியமித்துள்ளது.

பிற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியோரிடம் விருப்பத்தை கேட்டு ஐகோர்ட்டில் தெரிவிக்கும்படி சஞ்சய் மோகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு தரப்பில் முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com