செந்துறை அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் காயம்

செந்துறை அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன், கலையரசன், தங்கவேலு, கொளஞ்சிநாதன். விவசாயிகளான இவர்கள் 4 பேரும் அங்குள்ள டீக்கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒட்டக்கோவில் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

லாரியை சிதம்பரம் அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்தார். லாரி மருவத்தூர் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை சாலையோரம் பேசிக்கொண்டிருந்த வேல்முருகன் கவனித்து விட்டார். உஷாரான அவர் உடனடியாக அருகில் நின்று கொண்டிருந்த கலையரசனை தள்ளி விட்டு விட்டு அருகில் நின்ற கொளஞ்சி நாதன், தங்கவேல் ஆகியோரின் சட்டையை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி 2 விவசாயிகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதனை கண்ட கிராம மக்கள் விரட்டி சென்று லாரியை மருவத்தூர் முனியப்பா கோவில் அருகே வழிமறித்து சிறைபிடித்தனர். அதன் பின்னர் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்து லாரியையும் ஓட்டுநரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செந்தில் குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com