ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கோரி செம்மலை எம்.எல்.ஏ. மனு

ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என செம்மலை எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கோரி செம்மலை எம்.எல்.ஏ. மனு
Published on

எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வமும், அவரது 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். ஆனால் 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்தனர். அரசுக்கு எதிராக பேட்டியும் கொடுத்தனர்.

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் செய்ததின் பேரில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்கள் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விசயத்தில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.


இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. அதனால் ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செம்மலை எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் சபாநாயகர் எடுத்த முடிவு போல் ஆந்திராவிலும் இதற்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திராவின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

ஒரே மாதிரியான வழக்குகள் இரு கோர்ட்டுகளில் நடைபெறுவது சரியாக இருக்காது என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விசாரிக்க மனு கொடுத்துள்ளோம்.

சபாநாயகரின் நடவடிக்கையில் தலையிடுவதற்கும் அவருக்கு உத்தரவிடுவதற்கும் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா? என்பதே இதன் அம்சமாகும். எனவே 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருவதற்கு தி.மு.க. கொறடா சக்கரபாணிக்கு அதிகாரம் கிடையாது.

சட்டசபையில் ஆளும் கட்சி கொறடா புகார் கொடுத்தால்தான் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் நாங்கள் அப்போது தனி அணியாக போனதால் கொறடா எங்களுக்கு உத்தரவு கொடுக்கவில்லை.

இவரது உத்தரவு எங்களை கட்டுப்படுத்தவில்லை. எனவே கொறடா புகார் செய்யாமல் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதில் பல சட்ட பிரச்சனைகள் உள்ளது. அதனால்தான் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com