என் குடும்ப விழாவில் பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ பேட்டி

என் குடும்ப விழாவில் பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றதில் தவறு இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
என் குடும்ப விழாவில் பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ பேட்டி
Published on

மதுரை:

பிரபல சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் மதுரை பைனான்சியர் அன்புச் செழியன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மதுரை பாண்டி கோவிலில் நடந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோருடன் சினிமா பைனான்சியர் அன்புச் செழியனும் கலந்து கொண்டார்.

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்த நேரத்தில் தேடப்பட்டு வந்த அன்புச்செழியன் அமைச்சரின் இல்ல விழாவில் நேரடியாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை அன்புச்செழியன் தனியாக சந்தித்து பேசினார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் அன்புச் செழியன் விழாவில் கலந்து கொண்டது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

அன்புச்செழியன் எனது இல்ல விழாவில் கலந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை. அவர் தேடப்படும் குற்றவாளி கிடையாது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட சம்பவத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை அவர் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறார்.

அப்படி இருக்கும்போது அவர் எனது இல்ல விழாவில் கலந்து கொண்டதை சர்ச்சையாக்குவது தேவையில்லாதது.

சினிமா துறையில் உள்ள பலர் அன்புச்செழியன் நல்லவர் என்றே கூறுகிறார்கள். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியனர் இதனை பெரிதாக்குவது தவறான அணுகுமுறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் நடந்த அமைச்சர் இல்ல விழாவில் அன்புச்செழியன் பங்கேற்றது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அன்புச்செழியன் மீது கந்துவட்டி, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அன்புச்செழியன் தன் மீதான போலீசாரின் கிரிமினல் நடவடிக்கையை கைவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, அன்புச் செழியன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இடைக் கால தடை விதித்து உத்தர விட்டது.

இதனால் அவரை சட்ட ரீதியாக தற்போது கைது செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com