சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலன் சிக்கினார்

தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலன் சிக்கினார்
Published on

பள்ளிக்கரணை:

தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்த குணசேகரன் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் தேவி.

வேலூரை சேர்ந்த தேவி, கடந்த ஜனவரி மாதம் பொன்னம்பலம் என்பவர் மூலம் குணசேகரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந்தேதி தேவியை பார்ப்பதற்காக வாலிபர் ஒருவர் வந்தார்.

அவரை தனது கணவர் என்று குணசேகரிடம் தேவி தெரிவித்தார். இதையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். வீட்டு வேலையையும், மாடுகளை பராமரிப்பதையும் அவர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி இருவரும் திடீர் என்று மாயமானார்கள். கணவன்- மனைவி என்பதால் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்று குணசேகரன் கருதினார். எனவே இதுபற்றி போலீசில் புகார் செய்யவில்லை.

இந்த நிலையில் இருவரும் தங்கியிருந்த வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலையூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில தினங்களுக்கு முன்பு மாயமான தேவி கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், தேவியுடன் தங்கிய வாலிபர்தான், இந்த பெண்ணை கொலை செய்து பிணத்தை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. தேவியுடன் தங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதில் தேவியை கொலை செய்த வாலிபர் அவருடைய காதலர் என்று தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com