பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட 950 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

புதுப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட 950 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் நடந்து வரும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்ஸ் பெக்டர் நிர்மலா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு மினி வேனை போலீசார் சோதனை செய்தபோது அதில் மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் தமிழக அரசின் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேற்கொண்ட விசாரணையில் திருவண்ணா மலை மாவட்டம் தண்டராம்பேட்டை சேர்ந்த சங்கர் (வயது35) டிரைவர் மற்றும் சேலம் கொத்தாம்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (27) என்பதும் இவர்கள் பெங்களூரில் இருந்து அலங்காநல்லூர் வழியாக மதுரைக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 30 தீவன தவிட்டு மூட்டையில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், அதற்காக பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்து கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com