இளம் வீரர்களுக்கு டோனி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை: ஷேவாக் பதிலடி

இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி எப்போதும் இளம் வீரர்களுக்கு இடையூறாக இருந்ததில்லை என்று வி.வி.எஸ்.லட்சுமணன் மற்றும் அகர்கர் கருத்துக்கு விரேந்திர ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
இளம் வீரர்களுக்கு டோனி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை: ஷேவாக் பதிலடி
Published on

நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் டோனி அதிரடியாக விளையாடவில்லை. அவர் 37 பந்தில் 49 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் நிதானமாக இருந்ததால் விமர்சனத்துக்குள்ளானது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அகர்கர் ஆகியோர் டோனி பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பினர். ஆட்ட இலக்குக்கு தகுந்தபடி டோனி அடித்து விளையாடவில்லை. அவரது நிதானமான ஆட்டத்தால் அணியின் உத்வேகம் நியூலாந்துக்கு சாதகமாக திரும்பியது. 20 ஓவர் போட்டியில் டோனி 4-வது வீரராக களம் இறங்க வேண்டும். பெரிய ஸ்கோர் இலக்கை நோக்கி ஆடும் போது டோனியின் இதுபோன்ற நிதானமான ஆட்டம் வெற்றிக்கு உதவாது.

20 ஓவர் போட்டியில் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வழியிட வேண்டும். அவர் ஒதுங்க வேண்டிய நேரம் இதுதான் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் வி.வி.எஸ்.லட்சுமணன் கருத்துக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

டோனி எப்போதும் இளம் வீரர்களுக்கு இடையூறாக இருந்ததில்லை. சரியான நேரத்தில் அவர் ஓய்வு பெறுவார். தற்போதும் 20 ஓவர் போட்டியிலும் டோனி இந்திய அணிக்கு தேவை.

டோனிக்கு பதிலான மாற்று வீரரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை. டோனி அணியில் உள்ள தனது பங்களிப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

அவர் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும். இதை அணி நிர்வாகம் அவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் சீக்கிரமாக அவுட் ஆனாலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com