

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருமுருகப்பெருவிழா தேரடி திடலில் நடந்தது. வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமை வகித்தார். மாநில ஒருங் கிணைப்பாளர் செந்தில் நாதா சேகுவாரா முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ஜ.க, வேறு. ஆர்.எஸ்.எஸ். வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். அது போல நாம் தமிழர் வேறு. வீரத்தமிழர் முன்னணி வேறு அல்ல. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி நம் தமிழர் மொழி. எல்லா மொழி சொல்லுக்கும் விளக்கம் அளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. தமிழன் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வோம்.
நாம் இந்துக்கள் அல்ல. இந்து மதத்தையும், இந்தியா என்ற பெயரையும் உருவாக்கியது வெள்ளைக்காரன். மிளகு வணிகத்திற்காக இங்கு வந்த வெள்ளைக்காரன் நமது பிரிந்த கிடந்த பகுதிகளை இணைந்து இந்தியா என்று பெயரிட்டு அழைத்தான். அவன் தான் இந்து சொல்லையும் உருவாக்கினான். இந்து என்ற சொல் மதமல்ல. நம்முடைய மதம் வீரசைவம் மற்றும் வீரவைணவம் தான்.
இடையில் வந்த ஆரியர்கள் தான் நம்மை சாதியின் பெயரளலும், மதத்தின் பெயராலும் பிரிந்து நம்மை அடிமையாக்கினார்கள். வீரத்திற்கு பெயர் போனவர்கள் தமிழர்கள். மூதாதையர்களை வழிப்படுவது நமது மரபு. குலதெய்வ வழிப்பாடு தான் தமிழர்களின் மரபு. குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்தினைகளை குறிக்கும் வகையில் முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகிய வழிபாட்டு முறைகளை நாம் தொடர வேண்டும்.
தற்போது நடக்கும் திருமுருகபெருவிழா போல வருங்காலத்தில் முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களுக்கு பெருவிழா எடுப்போம். இனி நம்முடைய மதம் எதுவென்று கேட்டால் வீரசைவன், வீரவைணவன் என்று கூறுங்கள்.
விநாயகர் விழா, குருநானக் விழா, மகாவீர் ஜெயந்தி விழா ஆகிய விழாக்களுக்கு விடுமுறை அளிப்பது போல் முப்பாட்டான் முருகப் பெருமானின் தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை அளிக்காதது ஏன்?. தமிழர்களின் மரபு என்பது வீரம் நிறைந்தது. முந்தைய காலங்களில் போரிட செல்லும் தமிழர்களுக்கு வலி தெரியாமல் இருக்க தான் வேல் குத்தி வந்தார்கள். நமது எல்லைகளை காக்க தமிழர்கள் நிறுவியது தான் எல்லைக்கல்.
தமிழர்களின் மரபுகளை மீட்டெடுத்து மீட்சியல் புரட்சி ஏற்படுத்த வேண்டும். மெய்பியல் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போது இங்குள்ள அனைவரின் வீடுகளில் நமது கொடி பறக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகள் கழித்து நாம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம்.
இவ்வாறு சீமான் பேசினார். #tamilnews #seeman