

நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது70). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது ஆடுகளும் மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் ஆடுகளும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்.
அந்த பகுதியில் சினிமா நடிகை ராதாவுக்கு சொந்தமாக 30 ஏக்கர் தோட்டம் உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் அந்த தோட்டத்திற்குள்ளும் சென்று மேய்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ராதாவின் தோட்டத்து காவலாளியான கேரளாவை சேர்ந்த ரவி (53), தளவாய் புரத்தை சேர்ந்த சாலமன் ஆகியோர் தோட்டத்தில் கால்நடைகள் மேய்வதை தடுக்க பழங்களில் விஷ மருந்து கலந்து ஆங்காங்கே போட்டுள்ளனர்.
நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ராமலிங்கத்தின் ஆடுகள் நடிகை ராதாவின் தோட்டத்துக்குள் சென்று, விஷம் வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டது. இதில் அடுத்தடுத்து 10 ஆடுகள் செத்து விழுந்தன.
ஆடுகளை காணாமல் தேடிய ராமலிங்கம், நடிகை ராதாவின் தோட்டத்துக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு தனது 10 ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இறந்து கிடந்த ஆடுகளை கால்நடை டாக்டரை வைத்து பரிசோதித்தனர். அப்போது ஆடுகள் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ராதாவின் தோட்ட காவலாளிகள் ரவி, சாலமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கேரளாவை சேர்ந்த காவலாளி ரவியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் காட்டு பன்றிகளை அழிக்க வைத்த விஷப்பழத்தை ஆடுகள் தின்று பலியானதாக கூறியுள்ளார். மற்றொரு காவலாளி சாலமனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.