திருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருக்கோவிலூர் அருகே வாலிபரால் தாக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்
Published on

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. இவரது மகள் தனம், மகன் சமயன். இவன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த பிப்ரவரி 21-ந் தேதி ஆராயி தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வாலிபர் ஒருவன் நைசாக வீட்டுக்குள் புகுந்து அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு சென்று விட்டான்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த சமயன் அதே இடத்தில் இறந்தான். தாக்குதலில் காயம் அடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லை நாதன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தனர். இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் தில்லை நாதனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் தில்லைநாதனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தனத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.

அவள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவள் சிகிச்சை பெறும் அறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி தனத்தை அரகண்டநல்லூர் போலீசார் திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவளிடம் நீதிபதி பத்மாவதி ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

அப்போது சிறுமி தனம் பல்வேறு திடுக்கிடும் தகல்களை ரகசிய வாக்குமூலமாக அளித்ததாக தெரிகிறது. இதன்பின்பு தனத்தை போலீசார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

சிறுமியின் தாயார் ஆராயி புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com