வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: 10 ஆயிரம் மீனவர்கள் 7-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 7-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை படத்தில் காணலாம்.
ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை படத்தில் காணலாம்.
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதி கடற்கரை கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக நேற்றும் 7-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் அதிகமானதால் கரையோரம் வைக்கப்பட்டிருந்த படகுகளை மீட்டு ஆறு மற்றும் கடற்கரையில் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஒரு சில மீனவர்கள் வலைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீன் பிடிக்கச் செல்லாததால் மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் மீனவர்களுக்கு மழைக் கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த தொகை தற்போது ஒரு சில மீனவர்களுக்கு மட்டுமே வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மீனவர்களுக்கு இந்த நிவாரண தொகை இன்னும் கிடைக்கவில்லை. 7 நாட்களாக மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் சிரமப்படுவதால் உடனடியாக மழைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com