

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை நடக்கும் இந்த தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (பி பிரிவு) சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 255 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து களம் கண்ட ஸ்காட்லாந்து அணி 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. வெற்றிக்கு வித்திட்ட கலும் மெக்லியோட் 157 ரன்கள் (146 பந்து, 23 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார்.