தனது காரின் இருக்கையில் பள்ளி மாணவியை அமர வைத்த கலெக்டர்

செய்யாறு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர், பள்ளி மாணவியை தனது காரின் இருக்கையில் அமர வைத்து, நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
தனது காரின் இருக்கையில் பள்ளி மாணவியை அமர வைத்த கலெக்டர்
Published on

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் ஒரு தனியார் காலணி தொழிற்சாலை உள்ளது. கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அந்தத் தனியார் காலணி தொழிற்சாலை சார்பில் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பங்கேற்று அரசு பள்ளியில் படித்து கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவி மோனிஷா கடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்றதால், அவருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு ஆகியவற்றை வழங்கி கலெக்டர் பாராட்டினார். அப்போது கலெக்டரிடம், அந்த மாணவி நானும் உங்களைபோல் மாவட்ட கலெக்டராவதே எனது லட்சியம், எனத் தெரிவித்துள்ளார்.

அதனை கேட்ட கலெக்டர், பரிசளிப்பு விழா முடிந்ததும் மாணவி மோனிஷாவை அழைத்தார். சைரன் பொருத்தப்பட்டு தனக்காக வழங்கப்பட்ட அரசு காரில் தான் உட்காரும் இடத்தில் அந்த மாணவியை அமர வைத்து, அந்த மாணவியின் அருகில் கலெக்டர் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து, இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் உன்னுடைய மனதில் உதிக்க வேண்டும் எனக் கலெக்டர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், நானும் உன்னைப்போல் அரசு பள்ளியில் படித்துத்தான் மாவட்ட கலெக்டர் பதவியை வகித்து வருகிறேன் என்றார்.

கலெக்டரின் இந்தச் செயல்பாடு மாணவியை நெகிழ்ச்சியடைய செய்தது. அதைத்தொடர்ந்து அவர், ஆனந்த கண்ணீருடன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மாணவி மோனிஷாவை ஊக்கப்படுத்திய கலெக்டர் கந்தசாமியின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com